பியூட்டி வேஷம் போட்ட பாட்டி: 4-வது திருமணத்திற்குத் தயாரான போது காப்பு மாட்டிய காவல்துறை!

பியூட்டி வேஷம் போட்ட பாட்டி: 4-வது திருமணத்திற்குத் தயாரான போது காப்பு மாட்டிய காவல்துறை!

பேரன், பேத்தி இருக்கும் பெண்மணி ஒருவர், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என திருமண மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். நான்காவது திருமணத்திற்கு இவர் தயாராகிக் கொண்டிருந்த போது மூன்றாவது கணவரின் மாமியார் கொடுத்த புகாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, ஆவடி, முத்தாப்புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் கோவர்தனன்(47). இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். கோவர்தனனின் எதிர்காலம் பாழாகி விடக்கூடாது என்பதற்காக அவருக்கு மறுமணம் செய்ய, அவரின் தாய் இந்திராணி முடிவு செய்தார். இதையடுத்து திருமணத் தகவல் மையத்தின் மூலமாக ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், புதூர் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணை பார்த்தனர். சந்தியாவைக் கோவர்த்தனனுக்குப் பிடித்த காரணத்தால் கடந்த அக்டோபர் மாதம் திருநின்றவூரில் திருமண மண்டபம் ஒன்றில் இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. திருமணத்தைப் பதிவு செய்வதற்காக ஆதார் கார்டு, கல்வி சான்று உள்ளிட்டவற்றைக் கோவர்த்தனன் கேட்டுள்ளார். இப்பதான் நமக்குக் கல்யாணம் ஆகியிருக்கிறது கொஞ்ச நாள் கழித்து திருமணத்தைப் பதிவு செய்யலாம் என தள்ளிப் போட்டு வந்துள்ளார் சந்தியா.

திருமணத்திற்குப் பிறகு சம்பளத்தை தன்னிடம் கொடுக்க வேண்டும் எனச் சந்தியா கோவர்த்தனனை வற்புறுத்தி வந்தார். இதையடுத்து அவர் முழு சம்பளத்தையும் சந்தியாவிடமே கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து சொத்துக்களையும் தன் பெயருக்கு மாற்றி எழுதித் தர வேண்டும் எனச் சந்தியா பிடிவாதம் பிடித்துள்ளார். சந்தியா மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவர் கொடுத்திருந்த முகவரிக்குச் சென்று அந்த வீட்டிலிருந்த ரவி என்பவரிடம் சந்தியா குறித்து விசாரித்துள்ளார் கோவர்தனன். அப்போது சந்தியாவின் முதல் கணவர்தான் ரவி என்பதும், அவருக்கு இரண்டு மகள்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த வீட்டிலிருந்த சந்தியாவின் போட்டோவில் தலை நரைத்து இருந்ததைக் கண்டு கோவர்தனன் அதிர்ந்து போய் உள்ளார். சந்தியாவிற்கு 50 வயது எனத் தெரிந்ததும் அவருக்குத் தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. தலைக்கு டை அடித்து, பியூட்டி பார்லரில் மெருகேற்றி தன்னை சந்தியா ஏமாற்றிவிட்டதை அம்மாவிற்கு போன் செய்து புலம்பி இருக்கிறார் கோவர்தனன். சந்தியா தங்களை மோசடி செய்து ஏமாற்றி விட்டதாக ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் இந்திராணி புகார் கொடுத்தார். இதையடுத்து சந்தியா ஜூன் 28-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்திராணி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், 2010-ம் ஆண்டு கணவர் ரவியுடன் சண்டை போட்டு வீட்டைவிட்டு வெளியேறியதும், சித்தூரில் உள்ள அம்மா வீட்டில் தங்கி இருந்த போது சுப்பிரமணி என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்ததும் தெரிய வந்துள்ளது. புரோக்கர் ஒருவரின் மூலமாக கோவர்தனனை மூன்றாவதாக சந்தியா திருமணம் செய்துள்ளார். சுகுணா, சந்தியா, சுகன்யா என அவருக்கு மூன்று பெயர்கள் இருப்பதும், சந்தியாவின் இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி குழந்தைகளைப் பெற்றுவிட்டார்கள் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. பேரன், பேத்திகள் இருக்கும் வயதில் 4-வது திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த சந்தியாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in