மூன்றாவது முறையாக தொடர்ந்து ‘டக் அவுட்’ - சொல்லிவைத்து சொதப்பும் சூர்யகுமார் யாதவ்; புதிய சாதனை!

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்மூன்றாவது முறையாக தொடர்ந்து ‘டக் அவுட்’ - சொல்லிவைத்து சொதப்பும் சூர்யகுமார் யாதவ்; புதிய சாதனை!

டி20 போட்டிகளில் கில்லியாக சொல்லி அடிக்கும் சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகியுள்ளார். தொடர்ந்து மூன்று முறை முதல் பந்திலேயே டக் அவுட் ஆன இந்திய வீரர் என்ற மோசமான சாதனையையும் இவர் படைத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது, அதனைத்தொடர்ந்து இந்திய அணி ஆடி வருகிறது. இந்தப் போட்டியில் சூர்யகுமார் தொடர்ந்து மூன்றாவது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார். ஆஸ்டர் ஏகர் வீசிய 35 ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி 54 ரன்களின் ஆட்டமிழந்த நிலையில், அடுத்ததாக களமிறங்கிய சூர்யகுமார் அதற்கு அடுத்த பந்திலேயே கிளீன் போல்டானார்.

ஏற்கெனவே அவர் மார்ச் 17ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 16 ரன்கள் எடுத்திருந்த போது விராட் கோலி 4 ரன்களுடன் மிட்செல் ஸ்டார்க் பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆனார். அதற்கு அடுத்த பந்திலேயே சூர்யகுமார் யாதவ் எல்பிடபுள்யூ முறையில் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டானார்.

அதேபோல மார்ச் 19ம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் 4வது ஓவரை ஸ்டார்க் வீசினார், இதில் 4வது பந்தில் ரோகித் சர்மா 13 ரன்களுடன் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதற்கு அடுத்த பந்திலேயே கடந்த ஆட்டத்தைப் போலவே, அதே ஸ்டார்க் பந்தில், அதே எல்பிடபுள்யூ முறையில் சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டானார். மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், தொடர்ந்து மூன்று முறை டக் அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1994ல் சச்சின் டெண்டுல்கரும் தொடர்ந்து மூன்று முறை டக் அவுட் ஆகியுள்ளார். ஆனால் அவர் இரண்டாவது பந்துகளில் ஆட்டமிழந்தனர். ஒட்டுமொத்தமாக, தொடர்ந்து மூன்று முறை டக் அவுட்டை பதிவு செய்த 14வது பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆவார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in