
திருடுவதற்காக சென்ற வீட்டில், பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் என எதுவுமே கிடைக்காததால் 500 ரூபாயை திருடன் வைத்து விட்டுச் சென்ற விசித்திரமான சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லி, ரோகினி பகுதியில் வசித்து வரும் வயதான தம்பதியர் கடந்த 19-ம் தேதி குர்கான் பகுதியில் வசித்து வரும் தங்களது மகனைச் சந்திக்க சென்றுள்ளனர். இதனை தெரிந்துக் கொண்ட திருடன், ஆளில்லாத வீட்டில் புகுந்துள்ளான். ஆனால் வீட்டில் விலை மதிப்புமிக்க பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. பணமும் இல்லை. இதையடுத்து எதையும் திருடாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளான்.
இதனிடையே, வீடு திறந்திருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், தம்பதியருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டிற்கு விரைந்து வந்தனர். அப்போது, வீட்டில் இருந்து எந்தவொரு பொருளும் திருடுப் போகவில்லை. ஆனால் வீட்டில் திருடுவதற்கு எதுவும் இல்லாததால் திருடன் 500 ரூபாயை கதவருகே வைத்து விட்டு சென்றுள்ளான்.
இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.