இரண்டே நாட்களில் இரும்புப் பாலத்தைப் பிரித்து எடுத்துச் சென்ற பிஹார் திருடர்கள்!

இரண்டே நாட்களில் இரும்புப் பாலத்தைப் பிரித்து எடுத்துச் சென்ற பிஹார் திருடர்கள்!

‘கிணற்றைக் காணோம்’ என வடிவேலு ஒரு படத்தில் சொல்லும் பொய்ப் புகாரையே ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள், இரண்டே நாட்களில் இரும்புப் பாலத்தைப் பிரித்து எடுத்துச் சென்ற பிஹார் திருடர்கள்.

பிஹார் தலைநகர் பாட்னாவிலிருந்து தென் திசையில் 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது அமியாவர் கிராமம். இங்கு 60 அடி நீள இரும்புப் பாலம் இருக்கிறது. ஒரு கால்வாய் மீது 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பழைய பாலம் இது. நீண்ட நாட்களாகவே கைவிடப்பட்டுக் கிடந்தது.

இந்தப் பாலத்தைத் தகர்த்துவிடுமாறு அமியாவர் கிராமவாசிகள், நீர்ப்பாசனத் துறையினரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் அரசு அதிகாரிகளும் தொழிலாளர்களும் அந்தக் கிராமத்துக்குச் சென்று பாலத்தைப் பிரிக்கும் வேலைகளில் ஈடுபட்டனர். கேஸ் கட்டர்கள் உள்ளிட்ட கனரக சாதனங்களைக் கொண்டுவந்திருந்த அவர்கள் துரிதமாகப் பாலத்தைப் பிரிப்பதைக் கண்டு கிராமவாசிகள் ஆச்சரியமும் பெருமிதமும் அடைந்தனர். அவர்களிடம் சென்று விசாரித்தபோது, தாங்கள் நீர்ப்பாசனத் துறையால் அவுட்சோர்சிங் முறையில் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் எனக் கூறினர்.

இரண்டே நாட்கள்தான். அதற்குள் மொத்தப் பாலத்தையும் வெட்டி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். கிராமவாசிகளுக்கு அதன் பின்னர்தான் ஓர் உண்மை தெரியவந்தது. நீர்ப்பாசனத் துறையினர் சார்பில் யாருமே அங்கு வரவில்லை என்பதுதான் அந்த உண்மை. ஆம், அவர்களின் பெயரைச் சொல்லி சில பலே திருடர்கள் காட்டிய கைவரிசை அது.

ரொம்பவே தாமதமாக சுதாரித்துக்கொண்ட கிராமவாசிகள், போலீஸில் புகார் அளித்தனர். எனினும், சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகும் நிலையில், எந்த இரும்பு பாகம் எந்தக் காயலான் கடையில் கிடக்கிறது எனக் கண்டறிய முடியாமல் போலீஸார் திணறுகிறார்கள். இந்தியாவில் பழைய இரும்புச் சாமான்களுக்கு ரொம்பவே மவுசு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது!

Related Stories

No stories found.