அட, இப்படி ஒரு திருடனா?: ஆச்சரியத்தில் உறைந்து போன போலீஸார்

அட, இப்படி ஒரு திருடனா?:  ஆச்சரியத்தில் உறைந்து போன போலீஸார்

கோயிலில் நகை, பொருட்களைத் திருடிய திருடன் ஒருவன், தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதியதுடன், திருடிய பொருட்களை மீண்டும் ஒப்படைத்துள்ள சம்பவம் போலீஸார் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் சாந்திநாத் திகம்பர் பகுதியில் ஜெயின் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அலங்கார வெள்ளி ஆபரணங்கள், சிலை மேல் வைக்கும் குடை மற்றும் தங்க நகைகள் அக்.24-ம் தேதி திருடு போனது. இதுகுறித்து போலீஸாரிடம் கோயில் நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். கோயிலில் திருடியது யார் என போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கோயில் அருகே உள்ள பஞ்சாயத்து அலுவலகம் அருகே ஒரு பை இருந்தது. இதை கோயிலைச் சேர்ந்த ஜெயின் குடும்பத்தினரைப் பார்த்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்த போலீஸார், அந்த பையைச் சோதனையிட்டனர்.

அதில் ஜெயின் கோயிலில் திருடப்பட்ட தங்க நகைகள்,வெள்ளிப்பொருட்கள் இருந்தன. அத்துடன் நோட்டுப் பேப்பரில் எழுதப்பட்ட ஒரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில், "நான் என்னுடைய செயலுக்காக மன்னிப்பை எதிர்பார்க்கிறேன். நான் தவறு செய்து விட்டேன். என்னை மன்னியுங்கள். நகைகளைத் திருடிய பின்பு நான் பெரும் சிரமத்திற்கு உள்ளானேன்" என்று எழுதப்பட்டிருந்தது.

நகை, பொருட்களைத் திருடி நான்கு நாட்களுக்குள் மனம் மாறி அதற்காக மன்னிப்பு கடிதம் எழுதி வைத்த திருடனின் செயலைக் கண்டு கோயில் நிர்வாகத்தினரும், போலீஸாரும் ஆச்சரியமடைந்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து மனம் மாறிய அந்த திருடனைத் தேடி வருகின்றனர். திருடன் எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in