நிலுவையில் இருந்த திருட்டு வழக்குகள்; தேடிய போலீஸ்: ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த கொள்ளையன்

நிலுவையில் இருந்த திருட்டு வழக்குகள்; தேடிய போலீஸ்: ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த கொள்ளையன்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி ரயில் எஞ்சின் ஒன்று சென்று கொண்டிருந்தது. துறைமுகத்திற்கும், மீளவிட்டான் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வாலிபர் ஒருவர் இன்று ரயில் முன் பாய்ந்தார். இதில் வாலிபர் படுகாயம் அடைந்தார். விபத்துகுறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துபோய் அந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வாலிபர் உயிர் இழந்தார்.

தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சக்திநகர் 3-வது தெருவைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவரது மகன் வேல்முருகன்(23) என்பது தெரியவந்தது. இவர்மீது தூத்துக்குடி தென்பாகம், சிப்காட், முத்தையாபுரம், மத்திய பாகம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவரை காவல்துறையினர் தேடி வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் வழக்குகளுக்கு பயந்து தற்கொலை செய்தாரா? அல்லது கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த வேல்முருகன் அதை நினைத்து மன உளைச்சலில் தற்கொலை செய்தாரா? என்பது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in