சென்னையில் இன்ஜினீயர் கணவர்; பிரசவத்துக்கு தாய் வீட்டுக்கு வந்த மனைவி: நகைகளை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்

சென்னையில் இன்ஜினீயர் கணவர்; பிரசவத்துக்கு தாய் வீட்டுக்கு வந்த மனைவி: நகைகளை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்

மயிலாடுதுறை அருகே வீட்டில் ஆள் இல்லாததை நோட்டம் விட்டு தெரிந்து கொண்ட கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து 54 சவரன் தங்க நகை, ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே வாணாதிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பிரகாஷ். இவர் சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மதுமிதா பிரசவத்துக்காக அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதனால் வீடு பூட்டிக் கிடக்கிறது. அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் பிரகாஷின் தந்தை ராமகிருஷ்ணன் அவ்வப்போது வந்து வீட்டை பார்த்துச் செல்வது வழக்கம்.

நேற்று காலை வீட்டுக்கு வந்த ராமகிருஷ்ணன் வீட்டைத் திறந்து பார்த்துவிட்டு திரும்பவும் நன்கு பூட்டிவிட்டு கிராமத்திற்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று மாலை மீண்டும் அவர் வந்தபோது வீட்டின் கிரில் கதவு மற்றும் முன்பக்க கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பூஜையறை உடைக்கப்பட்டிருந்தது. அதன் உள்ளே இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 54 சவரன் தங்க நகைகள், 1 1/2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 21 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ராமகிருஷ்ணன் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். தொடர்ந்து மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, டிஎஸ்பி வசந்தராஜ் மற்றும் குத்தாலம் போலீஸார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி, அதன் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

பிரதான சாலைப்பகுதியில் உள்ள அவ்வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் தொடர்வதற்குள் போலீஸார் கொள்ளையர்களை பிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in