
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கொள்முதல் நிலைய ஊழியரின் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீழையூர் ஒன்றியம் வேளாங்கண்ணி அருகில் உள்ள பிரதாபராமபுரம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் உக்கிரவேல். இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வள்ளி. இருவரும் கடந்த மாதம் 28-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கடலூருக்கு சென்றுள்ளனர். பின்னர் நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார்கள்.
அப்போது வீட்டை முன் பக்க கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். வீட்டில் உள்ள பொருள்கள் எல்லாம் சிதறிக் கிடந்தன. அதனால் பதறிப்போனவர்கள் அவர்களது அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒரு பவுன் காசுகள் 10, காது வளையம் 2 செட், தோடு தொங்கல் 2 செட், உள்ளிட்ட 25 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
அத்துடன் வீட்டில் இருந்த வெள்ளி காமாட்சி விளக்கு 1 ,வெள்ளி சாவிக்கொத்து 1, பணம் 20,000 ரூபாய் ஆகியவையும் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வள்ளி கொடுத்த புகாரின் பேரில் கீழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கைரேகைகளை பதிவு செய்த போலீஸார் அதனை அடிப்படையாகக் கொண்டு மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.