கொக்கியால் பீப் சத்தம்... கழற்றப்பட்ட மாணவிகளின் உள்ளாடைகள்: நீட் தேர்வு எழுதச் சென்றவர்களுக்கு நடந்த கொடுமை

கொக்கியால் பீப் சத்தம்... கழற்றப்பட்ட மாணவிகளின் உள்ளாடைகள்: நீட் தேர்வு எழுதச் சென்றவர்களுக்கு நடந்த கொடுமை

கேரள மாநிலம், கொல்லத்தில் நீட் தேர்வுக்குச் சென்ற தன் மகளை உள்ளாடையைக் கழற்ற சொன்னதாக தந்தை ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இதில் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஆயூரில் உள்ள மார்த்தோமா தொழில்நுட்பவியல் கல்லூரியிலும் இந்தத் தேர்வு நடைபெற்றது. இங்கு தேர்வெழுத வந்த கல்லூரி மாணவிகளின் உள்ளாடையில் உலோகக் கொக்கி இருந்ததால் உலோகப் பொருள்கள் நீட் தேர்வுக்குள் கொண்டு செல்லக் கூடாது என தடையிருப்பதாக, உள்ளாடையைக் கழற்ற சொல்லியுள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொல்லம் எஸ்.பியிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையும், புகார்தாரருமான கோபக்குமார் காமதேனு இணையத்திடம் கூறுகையில், “தேசிய தேர்வு முகமையின் வழிகாட்டுதல்படி உள்ளாடைகளில் உலோகக் கொக்கிக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அவர்கள் உள்ளாடையை அகற்றச் சொன்னார்கள். அங்கு இருந்த அனைத்து மாணவிகளும் இந்தச் சிக்கலை எதிர்கொண்டார்கள். இதனால் என் மகளால் சரியாகத் தேர்வுகூட எழுதமுடியவில்லை. மாணவிகள் அனைவரும் தங்கள் உள்ளாடைகளை ஒரே அறையில் கொட்டும்மாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இதில் கரோனா விதிமுறைகள்கூட பின்பற்றப்படவில்லை. அதனால் தான் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

நீட்டிற்கான வழிகாட்டுதலில் பெரிய பட்டன் கொண்ட ஆடைகளை மட்டுமே தடை செய்கிறது. ஆனால் மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றச் சொன்னது அதிர்ச்சியளிக்கிறது. ஹாலுக்குள் நுழைய மெட்டல் டிடெக்டர் வழியாக என் மகள் நுழைந்தபோது பீப் சத்தம் கேட்டுத்தான், உலோகம் இருப்பதாகச் சொல்லி உள்ளாடையை அகற்றச் சொன்னார்கள். இந்த ஒரு மையத்தில் மட்டும் தான் இந்தப் பிரச்சினை இருந்தது”என்றார்.

நீட் தேர்வு எழுதவந்த மாணவிகளை கொல்லத்தில் உள்ளாடைகளைக் கழற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in