
நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்டையின்றி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவிலில் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு இன்று மாலை திடீரென தனி ஒருவராக சட்டை இல்லாமல் வந்தவர் ஆட்சியர் அலுவலகத்தின் எதிர்புறம் உள்ள பேரிகார்டு அமைக்கப்பட்டிருக்கும் பகுதியில் நின்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு அரைநிர்வாணமாக நபர் ஒருவர் போராட்டம் நடத்துவது தெரிந்ததும், நேசமணிநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்துவந்து அவரிடம் விசாரணை நடத்தினர். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர், நெய்யூரைச் சேர்ந்த சுந்தரம்பிள்ளைத் தம்பி என்பது தெரியவந்தது. இவருக்கு குமரி மாவட்டம், திங்கள் சந்தை அருகே சொத்து இருந்ததாகவும் அதனை அவரது சகோதரர் ஆக்கிரமித்ததாகவும், இதுதொடர்பாக பல அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். தன் சொத்துக்களை மீட்டுத்தர அரைநிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து நேசமணிநகர் போலீஸார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
திடீர் அரைநிர்வாணப் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலக சாலையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.