`முதல்வர் அய்யா கலெக்டர் இன்னும் வீடு தரவில்லை; தெருவில் நிற்கிறேன்'- கண்கலங்கும் வேலம்மாள் பாட்டி

வேலம்மாள் பாட்டி
வேலம்மாள் பாட்டி

வேலம்மாள் பாட்டி முதல்வர் தனக்குக் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருப்பதாக வேதனையோடு கூறும் காணொளியை பாட்டியின் ஆஸ்தான புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

நாகர்கோவில் மாநகராட்சியின் புகைப்படக் கலைஞராக இருந்தவர் ஜாக்சன் ஹெர்பி. கரோனா காலக்கட்டத்தில் நோயாளிகளின் சிகிச்சை அறைக்குள் நுழைந்து புகைப்படம் எடுத்ததில் தொடங்கி, முதன்முதலில் கரோனா நோயாளி இறப்புக்குப் பின் எரியூட்டப்படுவதுவரை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டிருந்தார். அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு போய்ச்சேரும் வகையில் தனித்திறன்மிக்க புகைப்படங்களாக எடுப்பது ஜாக்சன் ஹெர்பியின் வழக்கம்.

அந்தவகையில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு, 2000 ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு மலர்ந்த முகத்துடன் சென்ற வேலம்மாள் என்னும் பாட்டியை ஜாக்சன் ஹெர்பி எடுத்த படம் வைரல் ஆனது. இதன் மூலம் வேலம்மாள் பாட்டியும் பேமஸ் ஆனார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினே இந்தப் புகைப்படத்தை இந்த ஏழைத்தாயின் சிரிப்பே... நம் ஆட்சியின் சிறப்பு எனத் தன் சோசியல் மீடியா பக்கங்களில் பதிவு செய்தார்.

அண்மையில் மழைபாதிப்பினைப் பார்வையிட குமரிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த வேலம்மாள் பாட்டி, தான் வீடு இல்லாமல் கஷ்டப்படுவதாகத் தெரிவித்தார். இந்நிலையில் பாட்டியை புகைப்படம் எடுத்து வைரல் ஆக்கிய அதே புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி, இப்போது வேலம்மாள் பாட்டியின் வீடியோ ஒன்றை தன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் வேலம்மாள் பாட்டி, “முதலமைச்சரய்யா... நேரில் பார்க்கும்போது நீங்கள் வீடு தருகிறேன் என்று சொன்னீங்க. நான் கலெக்டர் ஆபீஸ்க்கு போயிட்டு இருக்கேன். இதுவரை தரவில்லை. தெருவில் நிற்கிறேன் அய்யா!” என அந்த வீடியோவில் கூறியுள்ளார் வேலம்மாள் பாட்டி. முதல்வரின் கவனத்திற்கு என்னும் கேப்ஷனோடு இந்த வீடியோ வாட்ஸ் அப் குழுக்களில் பரவிவருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in