
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களைக் காண இன்று அனுமதி இலவசம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
சர்வதேச மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்திய குடியரசு தலைவர், பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ரவி உட்பட தலைவர்கள் பலரும் மகளிருக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
மகளிர் தினத்தையொட்டி இன்றைய தினம், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதனச் சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கட்டணமின்றி இலவசமாகச் சென்று பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.