'மேகவெடிப்பினை முன்கூட்டியே கண்டறிய உலகில் எந்த தொழில்நுட்பமும் இல்லை’ - வெளியான அதிர்ச்சி தகவல்!

'மேகவெடிப்பினை முன்கூட்டியே கண்டறிய உலகில் எந்த தொழில்நுட்பமும் இல்லை’ - வெளியான அதிர்ச்சி தகவல்!

அமர்நாத் மேக வெடிப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், “உலகம் முழுவதும் மேகவெடிப்பு நிகழ்வுகளை முன்னறிவிப்பதற்கான எந்த அமைப்பும் இல்லை. இதனால் மேகவெடிப்பு எவ்வளவு விரைவாக உருவாகின்றன, அவை எவ்வளவு தீவிரமானவை என்பதை கணிக்க முடியாது" என்ற அதிர்ச்சி தகவலை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் உள்ள வானிலை அலுவலகம் வெள்ளிக்கிழமையன்று அமர்நாத் பகுதியைச் சுற்றி லேசான மழை பெய்யும் என்று கணித்திருந்தது. ஆனால் ​​​​அங்கு திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்த அதிதீவிர கனமழையால் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

அமர்நாத் குகைக்கோயிலுக்கு அருகில் உள்ள தானியங்கி வானிலை நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மழைப்பொழிவு பதிவாகவில்லை. மாலை 4.30 முதல் 5.30 மணி வரை 3 மிமீ மழையும், மாலை 5.30 முதல் 6.30 மணி வரை 28 மிமீ மழையும் பதிவாகியது. 2 மணி நேரத்தில் மொத்தமாக 31 மிமீ மழைப்பொழிவு என்பது மேகவெடிப்பு ஆகாது. ஆனால் அங்கே ஒரு மணி நேரத்தில் 100 மிமீக்கும் அதிகமாக மழை பெய்திருக்கலாம் எனவும், அதனை பதிவு செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் இல்லை எனவும் சொல்லப்படுகிறது.

"அமர்நாத் குகைக்கு மேலே உள்ள பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம். எங்களின் தானியங்கி வானிலை நிலையத்தால் அளவிட முடியாத அளவுக்கு அதிக தீவிரமான மழை பெய்துள்ளது. மிகவும் தொலைதூரப் பகுதி என்பதால் அங்குள்ள மழைப்பொழிவை அளவிடுவதற்கு எங்களுக்கு வேறு வழியும் இல்லை" என்று ஸ்ரீநகரில் உள்ள வானிலை பணியகத்தின் விஞ்ஞானி சோனம் லோட்டஸ் தெரிவித்திருக்கிறார்

அமர்நாத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர், 40 பேரை இன்னும் காணவில்லை. அதிகாரிகள் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால் தற்போது அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, இதேபோன்ற மேகவெடிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஹோன்ஜார் கிராமத்தில் ஏற்பட்டது. இதில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர், பலரை காணவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் இமயமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மேக வெடிப்புகள் அதிகளவில் உருவாக்குகின்றன. ஆனால் இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிப்பது சவால்கள் நிறைந்ததாக உள்ளது

இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி, “உலகளவில் மேக வெடிப்பு நிகழ்வுகளை முன்னறிவிப்பதற்கான அமைப்பு எதுவும் இல்லை. இந்த மேகவெடிப்புகள் எவ்வளவு விரைவாக உருவாகின்றன மற்றும் எவ்வளவு தீவிரமானவை என்பதை தற்போதுள்ள மாடலிங் அமைப்பால் பெரும்பாலும் கணிக்க முடியாது. மலை நிலப்பரப்பில் அதிகளவில் ஈரப்பதம் குவிவது இதுபோன்ற மேகவெடிப்பு நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. மேக வெடிப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காலநிலை மாற்றம் ஒரு காரணமாக இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட புவி அறிவியல் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 1969 மற்றும் 2015 க்கு இடையில் இந்தியாவின் மேற்கு கடற்கரை மற்றும் மேற்கு இமயமலையின் அடிவாரத்தில் மேக வெடிப்புகள் அதிகரித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in