வேலூரில் ஆவின் அதிகாரிகள் மெத்தனம்: பால் விநியோகம் பாதிப்பு

வேலூரில் ஆவின் அதிகாரிகள் மெத்தனம்: பால் விநியோகம் பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் ஆவின்  பால் விநியோகம்  இன்று கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால்  மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை ஆவின் பால்  விநியோகம் முறைப்படி நடைபெறவில்லை.  பல பகுதிகளிலும் காலை ஒன்பது மணி வரையிலும் கூட பால் விநியோகம் செய்யப்படவில்லை.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள  சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் தீபாவளியை முன்னிட்டு ஏற்பட்ட தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுதான் உரிய நேரத்தில் விநியோகம் செய்யப்படாததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இன்று காலை எப்போதும்போல பால் முகவர்களுக்கு விநியோக வாகனங்கள் மூலம் குறித்த நேரத்திற்கு ஆவின் பால் விநியோகம் நடைபெறவில்லை. அதனால்  பால் முகவர்கள் தாங்களே வாடகை வாகனங்களை ஏற்பாடு செய்து பால் பண்ணைக்கு நேரடியாக பால் ஏற்றிச் செல்ல வந்தும் கூட பயனில்லை. பாக்கெட் உற்பத்தி செய்து, அதனை டப்புகளில் அடுக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுவதில் ஆட்கள் பற்றாக்குறையால்  தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்  பால் முகவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

தீபாவளியைக் கொண்டாட தொழிலாளர்கள் விடுப்பில் சென்றுள்ளது  வேலூர் ஒன்றிய ஆவின் உயரதிகாரிகள் அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்தும் கூட மாற்று ஏற்பாடுகளைச் செய்யாமல் மெத்தனப்போக்கோடு நடந்து கொண்டிருப்பதற்கு  பால் முகவர்கள்,  தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் என்று அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உடனடியாக பால் உற்பத்தியை சீர் செய்து குறித்த நேரத்திற்கு பால் முகவர்களுக்கு ஆவின் பால் விநியோகம் செய்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in