தேனி மாவட்டம், குச்சனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வுக்கு வந்த சட்டமன்ற உறுதிமொழி குழுவினர், அங்கு விஷக்கடி மருந்துகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தேனி மாவட்டம், குச்சனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்தநிலையில் தமிழக சட்டமன்ற உறுதிமொழிக் குழுவினர் அதன் தலைவர் வேல்முருகன் தலைமையில் தேனி மாவட்டத்தில் அரசால் உறுதிகொடுக்கப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
சட்டமன்ற உறுதிமொழிக் குழுவினர் குச்சனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது மருந்து, மாத்திரைகள் இருப்பு, பணி மருத்துவர்கள், செவிலியர்கள் வருகை பதிவேடுகள் உள்ளிட்டவற்றை சரிபார்க்கப்பட்டன.
அப்போது, பாம்பு, தேள் போன்ற விஷசந்துக்களினால் பாதிக்கப்படுபவர்களின் சிகிச்சைக்கு தேவையான விஷக்கடி மருந்துகள் இருப்பு இல்லாதது கண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும் இந்த வகை மருந்துகளை வைத்திருக்க குளிர்சாதன பெட்டியும் அங்கு இல்லாததும் தெரியவந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்க சட்டமன்ற உறுதிமொழிக் குழுவினர் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தனர்.