காரை வழிமறித்த கும்பல்; நடுரோட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட ரவுடி: ஜாமீனில் வந்த நிலையில் வெறிச்செயல்

ரெட் தினேஷ்
ரெட் தினேஷ்

சீர்காழி அருகே  மர்ம நபர்களால் வெட்டப்பட்ட ரவுடி ரெட் தினேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால்  அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தை சேர்ந்தவர் ரெட் தினேஷ்.  ரவுடியான இவர் மீது சீர்காழி, புதுப்பட்டினம், செம்பனார்கோவில் உள்ளிட்ட  காவல் நிலையங்களில்  பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடியான ரெட் தினேஷ் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்ட இவர் சில நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து  வெளியே வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று இரவு  ரெட் தினேஷ் மற்றும் அவரது நண்பர் கோவில்பத்து பகுதியில் காரில் சென்று  கொண்டிருந்தார்.  அப்போது சிலர் அந்த காரை வழிமறித்துள்ளனர். காரை நிறுத்திய வேகத்தில்  அடையாளம் தெரியாத அந்த  மர்ம நபர்கள் நான்கு பேர்  ரெட் தினேஷை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில்  ரெட் தினேஷுக்கு கை மற்றும் கால் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால்  அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். 

தகவல் அறிந்து  சென்ற சீர்காழி போலீஸார் ரத்த காயங்களுடன் மயங்கிக்கிடந்த ரெட் தினேஷை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த   மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம்  அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ரெட் தினேஷ் உயிரிழந்தார்.

இது குறித்து சீர்காழி போலீஸார்  வழக்குப்பதிவு செய்து அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நிஷா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு  விசாரணை மேற்கொண்டார்.  கொலையாளிகளை விரைந்து கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து  உத்தரவிட்டுள்ளார். ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதியில்  பரபரப்பையும், பதற்றத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in