’’பள்ளி குழந்தைகள் அதிக அளவில் செல்போன் பயன்படுத்துகிறார்கள்; அதில் நிறைய கெட்ட விஷயம் இருக்கு என்பதை புரிந்து தேவைக்கு மட்டுமே செல்போனை பயன்படுத்த வேண்டும்’’ என நடிகர் சூரி மாணவர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராக அறிமுகமாகி முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து அதிக அளவில் பேசப்பட்டவர் நடிகர் சூரி. தற்போது 'விடுதலை' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அசத்தியுள்ளார்.
இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகர் சூரி கலந்துக் கொண்டுள்ளார். இந்த விழாவில் பேசிய அவர், ‘’தற்போது உள்ள சூழலில் எல்லா குழந்தைகளிடமும் செல்போன் இருக்கிறது. அதில் நிறைய கெட்ட விஷயம் இருக்கிறது என்பதை பெற்றோர் பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும். தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
என்னுடைய நண்பரின் இரண்டரை வயது குழந்தை அடிக்கடி செல்போனை பயன்படுத்தியதால் கண் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் முதலில் செல்போனை அளவோடு பயன்படுத்த வேண்டும். பிள்ளைகளையும் தேவைக்கு மட்டும் பயன்படுத்த சொல்லுங்கள்’’ என்றார்.