தமிழகத்தில் 600 செல்போன் டவர்கள் திருட்டு: பிரபல தனியார் நிறுவனம் அதிர்ச்சி புகார்

தமிழகத்தில் 600 செல்போன் டவர்கள் திருட்டு: பிரபல தனியார் நிறுவனம் அதிர்ச்சி புகார்

தமிழகத்தில் 600 செல்போன் டவர்கள் திருடப்பட்டுள்ளதாக பிரபல தனியார் நிறுவனம் அதிர்ச்சி புகார் அளித்துள்ளது.

சென்னை மற்றும் மும்பையை தலைமையிடமாக கொண்டு ஜிடிஎல் இன்பிஃராஸ்டெக்சர் பிரைவேட் லிமிடட் (GTL infrastructure) என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை புரசைவாக்கத்தில் இந்நிறுவனத்தின் மண்டல அலுவலகம் உள்ளது. இந்நிறுவனம் தொலைத்தொடர்பு துறை அனுமதி பெற்று பிரபல தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு செல்போன் டவர்கள் அமைத்து அதனை பராமரிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றது. இந்தியா முழுதும் 26,000 செல்போன் டவர்களை அமைத்து நிர்வகித்து வரும் இந்நிறுவனம் தமிழகத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் அமைத்து பராமரித்து வருகிறது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை காவல் நிலையத்தில் இந்நிறுவனத்தின் திட்டப்பொறியாளர் கோசல்குமார் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஈரோடு சென்னி மலைப்பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் காணவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிரபல தனியார் செல்போன் நிறுவனம் (ஏர்செல்) செயல்படாததால் அந்நிறுவன செல்போன் டவர்களை பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல் இருந்தது. இதனால் செல்போன் டவரை கண்காணிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் 40 மீட்டர் செல்போன் டவர், ஜெனரேட்டர், பவர்பிளான்ட், ஏசி, பேட்டரி உட்பட 31.5 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவரை திருடி சென்றுவிட்டனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இது குறித்து தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2018-ம் ஆண்டு குறிப்பிட்ட தனியார் கப்பல் சேவை நிறுவனம் தங்கள் சேவையை நிறுத்தியது. இதனால் அந்த நெட்வொர்க் சேவை நிறுவனத்திற்காக இந்தியா முழுவதும் நிறுவப்பட்ட செல்போன் டவர்கள் செயல்படாமல் இருந்து வந்தன. தமிழகத்தில் இருக்கும் செல்போன் டவர்கள் செயல்படாமல் இருந்தபோது அதை கண்காணித்து வந்த நிறுவனங்கள், கரோனா காலகட்டத்தில் டவர் இருக்கும் இடத்திற்குச் சென்று கண்காணித்து பராமரிப்பை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் செயல்படாது இருந்த செல்போன் டவர்களை வேறு நெட்வொர்க் தேவைக்காக பயன்படுத்துவதற்கு ஆய்வு மேற்கொள்ள சென்றபோது, சில மாவட்டங்களில் செல்போன் டவர்கள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக செல்போன் டவர் திருடு போன மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் செயல்படாத செல்போன் டவர்களில் நிலைமை குறித்து ஆய்வு மேற்கொண்டதில் 600க்கும் மேற்பட்ட டவர்கள் மாயமாகி இருப்பது தெரிவந்துள்ளது. குறிப்பாக கரோனா காலகட்டத்தை சாதகமாக பயன்படுத்தி மர்ம கும்பல் ஆளில்லாமல், கண்காணிப்பு இல்லாமல் இருக்கும் தங்களது செல்போன் டவர்களை திருடி செல்வதாக பாதிக்கப்பட்ட நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

ஒரு செல்போன் டவர் அமைக்க 25 முதல் 40 லட்சம் ரூபாய் செலவாகும். இதுவரை பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. செல்போன் டவர் திருட்டில் ஈடுபட்ட ஒரு கும்பலை தங்கள் ஊழியர்கள் கையும் களவுமாக பிடித்து கொடுத்துள்ளனர். இதுபோல் தொடர்ந்து செல்போன் டவர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எங்கள் நிறுவனம் போல் மற்ற நிறுவனங்களுக்கு சொந்தமான செல்போன் டவர்கள் மாயமாகி இருக்கிறது" என தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in