ஜாதக தோஷத்தைப் போக்குவதாக பூஜை: 30 பவுன் நகையுடன் எஸ்கேப்பான பெண்

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

தோஷத்தைப் போக்க சிறப்பு பூஜை செய்வதாகச் சொல்லி 30 பவுன் நகைகளை நூதனமுறையில் திருடிய பெண்ணை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

குமரிமாவட்டம், அருள்குன்று பகுதியைச் சேர்ந்தவர் முருகன். வெளிநாட்டில் வேலைசெய்துவரும் இவருக்கு தங்கம்(52) என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். இதில் மகன் வெளியூரில் தங்கிப் படித்துவருகிறார். மகள் அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் முதுகலைப் படிப்பு படித்துவருகிறார்.

தங்கம் கடந்த 2-ம் தேதி களியக்காவிளைப் பகுதியில் இருந்து, நாகர்கோவிலுக்குப் பேருந்தில் வந்துகொண்டு இருந்தார். அப்போது பேருந்தில் அவருக்கு பக்கத்து சீட்டில் இருந்த பெண் தங்கத்திடம் பேச்சுக் கொடுத்தார். அவரது பேச்சில் மயங்கிய தங்கமும் தன் குடும்ப விஷயங்கள் அனைத்தையும் பகிர்ந்தார். ஒருகட்டத்தில் அந்தப் பெண், தங்கத்திடம் உன் மகளுக்கு திருமணம் செய்துவைக்கவில்லையா? எப்போது திருமணம் எனக் கேட்டார். உடனே தங்கம் என் மகளுக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் திருமணம் தள்ளிப் போகிறது எனச் சொன்னார்.

உடனே அந்த பக்கத்து சீட்டுப் பெண்மணி, நானே தோஷத்திற்கு பரிகார பூஜை செய்பவள் தான். உங்கள் பகுதிக்கு அடுத்தமுறை வரும்போது அழைக்கிறேன் என சொல்லிச் சென்றார். சொன்னபடியே பூஜைக்காக தங்கத்தை அந்தப் பெண் அழைத்தாள். பூஜையில் தங்கத்தின் மகளை இருத்தியதும், அந்த பெண் வீட்டில் இருக்கும் நகைகள் அனைத்தையும் எடுத்துவரச் சொன்னார். தங்கமும் அதை அப்படியே நம்பி தன் மகளின் திருமணத்திற்காக செய்துவைத்திருந்த 30 பவுண் நகைகளை எடுத்துவந்தார்.

பூஜையில் அதைவைத்ததும், சிறிது நேரம் பூஜை செய்துவிட்டு தங்கத்தின் மகளை இன்னொரு அறையில் போய் இருக்கச் சொன்னார். தொடர்ந்து பரிகாரம் செய்யவந்த பெண் தங்கத்திடம் பிரசாதத்தை காகத்திற்கு வைக்கச் சொன்னார். அவர் காகத்திற்கு வைத்துவிட்டு வந்ததும், நகைகளை மூடியநிலையில் கொடுத்த பரிகாரம் செய்ய வந்த பெண், இதை மாலையில் தான் திறந்து பார்க்கவேண்டும் எனச் சொல்லியிருக்கிறார். அவர் பேச்சை அப்படியே நம்பிய தங்கமும் நகைகளை மூடிய நிலையிலேயே பூஜையறையில் வைத்தார். தொடர்ந்து பரிகாரம் செய்ய வந்த பெண்ணிற்கு காணிக்கை கொடுத்து, அவரை ஆட்டோ பிடித்தும் தங்கமே அனுப்பி வைத்தார். மாலையில் நகையை திறந்து பார்த்தபோது அவை திருடப்பட்டிருந்ததும்,அதற்குப் பதில் கவரிங் நகைகள் அதில் இருப்பதும் தெரியவந்தது. தோஷம் போக்க வந்தவர் திருடிவிட்டு ஜூட் விட்டது அதன் பின்னரே தங்கத்திற்கு தெரியவந்தது. அந்த பெண் கொடுத்த செல்போன் எண்ணில் தொடர்புகொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தங்கம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in