
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறைக்கு ஊருக்குச் சென்றிருந்தவர் வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் உள்ள மின்வாரிய குடியிருப்புக் காலனியைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் கனகராஜ்(56). இவரது நெல்லை அரசு போக்குவரத்துக் கழகத்தில் கிளார்க்காக உள்ளார். இவரது மனைவி பிரேமா தளவாய்புரத்தில் நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக உள்ளார். ஆண்ட்ரூஸ் கனகராஜ் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக நாசரேத்தில் உள்ள தன் உறவினர் வீட்டிற்குக் குடும்பத்துடன் சென்று இருந்தார்.
அவர் இன்று வீடு திரும்பியபோது அவரது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அவரது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் திருடு போயிருந்தது. வீட்டில் இருந்த சிசிடிவி கேமிராக்களை போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது மாடி வழியாக வீட்டுக்குள் புகுந்த மர்மக்கும்பல் வீட்டில் இருந்த சிசிடிவி கேமிராவுக்கு வெள்ளை அடித்துள்ளனர். இதனால் அவர்கள் முகம் பதிவாகவில்லை. அதன் பின்னர் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, இதேபாணியில் வேறு கொள்ளை சம்பவங்கள் நடந்திருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்துவருகின்றார்.