சாத்தான்குளத்தில் வீடுபுகுந்து திருட்டு: சென்னை வாலிபரை சுற்றிவளைத்த பொதுமக்கள்

சாத்தான்குளத்தில் வீடுபுகுந்து திருட்டு: சென்னை வாலிபரை சுற்றிவளைத்த பொதுமக்கள்

சாத்தான்குளத்தில் வீடுபுகுந்து திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து கட்டிவைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் இருந்து சாத்தான்குளத்திற்கு வந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை. இன்று அதிகாலை இவர் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது திடீர் என மர்மநபர் ஒருவர் திருடுவதற்காக வீட்டிற்குள் நுழைந்தார். இதை எதேச்சையாக பார்த்த செந்தாமரை உடனே சப்தம் எழுப்பினார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் குவிந்தனர். அவர்கள் மர்மநபரைப் பிடித்து தாக்கி, மின்கம்பத்தில் கட்டிவைத்தனர். மேலும் தட்டார்மடம் காவல்நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து தட்டார்மடம் ஆய்வாளர் பவுல்ரோஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இதில் பிடிபட்டவர் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன்(24) எனத் தெரியவந்தது. இவர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடவே சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை பகுதியில் அறை எடுத்து வசித்ததும் தெரியவந்தது. மணிகண்டனை கைது செய்த தட்டார்மடம் போலீஸார் அவருக்கு வேறு ஏதேனும் திருட்டு வழக்குகளில் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in