ஓபிஎஸ் ஆதரவாளரிடம் 50 லட்சம் திருட்டு: காங்கிரஸ் நிர்வாகி உள்பட 3 பேர் அதிரடியாக கைது

ஓபிஎஸ் ஆதரவாளரிடம் 50 லட்சம் திருட்டு: காங்கிரஸ் நிர்வாகி உள்பட 3 பேர் அதிரடியாக கைது

தேனி மாவட்ட அதிமுக நிர்வாகியிடம் இருந்து ரூ. 50 லட்சத்தை அபகரித்த அவரது கார் ஓட்டுநர் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்ட அதிமுகவின் இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார் பெரியகுளத்தைச் சேர்ந்த நாராயணன். ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரான இவர் அப்பகுதியில், மினரல் வாட்டர் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். ஆகஸ்ட் 27-ம் தேதி வெளியூர் சென்ற நாராயணன் அதன்பின்னர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்ல திட்டமிட்டார். இதனைத் தொடர்ந்து தன்னிடம் இருந்த ரூ. 50 லட்சம் பணத்தை தனது வீட்டில் ஒப்படைக்குமாறு அவரது கார் ஓட்டுநர் ஸ்ரீதரிடம் கூறி விட்டு நாராயணன் வேறு காரில் சென்று விட்டார்.

அதன்பிறகு ஸ்ரீதர் 50 லட்ச ரூபாயுடன் மாயமானார். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் காவல்நிலையத்தில் நாராயணன் புகார் அளித்தார். தொடர்ந்து, தனிப்படை அமைத்து ஸ்ரீதரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டுநர் ஸ்ரீதர், தனது உறவினரான பெரியகுளம் காங்கிரஸ் நகர தலைவர் ஸ்ரீதர் மற்றும் மற்றொரு உறவினரான பாலகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து நாராயணின் 50 லட்சத்தை அபகரிக்க முடிவு செய்தார். அதன்படி, 50 லட்சம் பணத்துடன் பெரியகுளம் நோக்கி வந்த ஸ்ரீதர் செல்போனில் தகவல் தெரிவித்து காங்கிரஸ் நகர தலைவர் ஸ்ரீதர் மற்றும் பாலகிருஷ்ணனிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் தன்னிடம் இருந்த மீதி தொகையை வேறு சிலரிடம் கொடுத்து வைப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். அவர் அடிக்கடி தனது நண்பர்களிடம் செல்போனில் பேசியதை நோட்டமிட்ட காவல்துறையினர் அவரை ஸ்ரீவில்லிபுத்தூரில் சுற்றி வளைத்தனர். பெரியகுளத்தில் ஏற்கெனவே காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீதரிடம் காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தியபோது தனக்கு எதுவும் தெரியாது என மறுத்து வந்தார். ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிடிபட்ட டிரைவரை பெரியகுளத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தியபின் பணத்தை வாங்கியதை அவர் ஒத்துக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், மீதி பணம் எங்கே உள்ளது? வேறு யாருக்கும் பணம் அனுப்பி உள்ளனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான மூவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in