புதை குழிக்குள் சிக்கிய சிறுவன்; உயிருக்கு போராடிய பதைபதைப்பு காட்சிகள்: சாதுரியமாக மீட்ட வாலிபர்கள்

புதை குழிக்குள் சிக்கிய சிறுவன்; உயிருக்கு போராடிய பதைபதைப்பு காட்சிகள்: சாதுரியமாக மீட்ட வாலிபர்கள்

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே மண்ணுக்குள் மார்பளவுக்கு புதைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை சாதுரியமாக செயல்பட்டு போராடி இளைஞர்கள் மீட்டெடுத்துள்ளனர்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தனது சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட மணலை சுரங்கத்தின் அருகிலேயே மலைபோல குவித்து வைத்திருக்கிறது. இரண்டாம் சுரங்கத்தின் அருகில் ஊமங்கலம் உட்பட பல கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் ஊமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவன் நேற்று அந்த மணல் மீது நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது மண்ணில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால் அந்த மணல் உள் வாங்கியது. அதனால் சிறுவன் மணலுக்குள் புதைந்தான். சிறுவனின் மார்பளவுக்கு உடல் மண்ணில் புதைந்தது. இதனால் பயத்தில் சிறுவன் அலறி நடுங்கினான்.

அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகம் இருக்காது என்பதால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் சிறுவன் தனியாளாக கத்திக் கதறிக் கொண்டிருந்தான். ஆனாலும் அவனைக் காப்பாற்ற அப்பக்கமாக யாரும் வரவில்லை. சிறுவன் கூச்சலிட்டு சோர்வடைந்து போனான். அந்த நேரத்தில் தான் அவனுக்கு எதிர்பாராத உதவி கிடைத்தது.

சிறுவன் இருந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நெய்வேலி ரோமாபுரியை சார்ந்த இளைஞர்கள் நான்குபேர் புதை குழிக்குள் சிக்கிய அச்சிறுவனை பார்த்தனர். உடனடியாக அவனை மீட்க அந்த பகுதியை நோக்கி விரைந்தனர். ஆனால் அவர்களின் கால்களும் மணலில் புதைய ஆரம்பித்தன. அதனால் செய்வதறியாது திகைத்தனர்.

சிறிது நேரம் யோசனைக்கு பின் அவர்களுக்கு புதிய உத்தி உதயமானது. அவர்களில் ஒருவர் மணலில் படுத்தபடி மெல்ல மெல்ல உருண்டு சென்று சிறுவனை அடைந்தார். படுத்த நிலையிலேயே சிறுவனை கையை கொடுத்து கொஞ்சம் கொஞ்ச கொஞ்சமாக மேலே இழுத்தார். இதற்கிடையே மற்றொரு இளைஞரும் மெல்ல மெல்ல உருண்டு சென்று சிறுவனை மீட்ட இளைஞருக்கு கை கொடுத்தார். அதன் விளைவாக சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

அவனுக்கு முதல் உதவி செய்து அவனது வீடு எங்கிருக்கிறது என்று விசாரித்து அங்கு கொண்டு சென்று விவரத்தை சொல்லி சிறுவனை ஒப்படைத்தனர். இத்தகைய பெருஞ்செயலை செய்த ரோமாபுரி இளைஞர்கள் பிரவின் குமார், எட்வின் ராஜ், மிரோலின், ராகுல் ஆகியோரை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in