`பெரிய ரவுடி ஆவதே தனது லட்சியம்'- சிறை வளாகத்தில் வீடியோ எடுத்து கெத்து காட்டிய வாலிபரை தேடும் போலீஸ்

விழுப்புரம் மாவட்ட சிறை வளாகம்
விழுப்புரம் மாவட்ட சிறை வளாகம்

விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலை வளாகத்தில் இளைஞர் ஒருவர் ரவுடியிசத்தை தூண்டும் விதமாக, `தான் ஒரு பெரிய ரவுடி' என்பதாக காட்டிக் கொள்ளும் வகையில் வீடியோ எடுத்து வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் அருகே வேடம்பட்டில் மாவட்ட மத்திய சிறைச்சாலை உள்ளது. இதில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் பலர் உள்ளனர். சிறை வளாகத்தில் எப்போதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும். அதை மீறி யாரும் சிலை வளாகத்திற்கு செல்ல முடியாது. இந்நிலையில் முகையூரை அடுத்த வி.புத்தூரை சேர்ந்த அசோக் என்ற வாலிபர் சிறைச்சாலை வளாகத்தில் நின்று கொண்டு ரவுடியிசத்தை ஊக்குவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை பதிவு செய்து, அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அந்த நபர், சிறை வளாகத்தில் இருந்து வெளியில் வருவதுபோலவும், அப்போது தனது சட்டையின் காலரை தூக்கிவிட்டவாறு வந்தவண்ணம் தனது செல்போனில் வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் திரைப்படம் போல காட்சி அமைத்து வீடியோ எடுத்துள்ளார். ஒருவரை டியூப்லைட் மற்றும் உருட்டுக்கட்டையால் அவர் தாக்குவது போன்று காட்சி அமைத்து வீடியோ எடுத்துள்ளார்.

தனது வாழ்க்கையில் ஒரு பெரிய ரவுடி ஆவதே தனது லட்சியம் என்று சொல்லும் வகையில் சிறை வளாகத்தில் எடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ எடுத்து கெத்து காட்டிய அந்த வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காவல்துறையினரின் கடுமையான பாதுகாப்பில் உள்ள சிறை வளாகத்தில் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்து இது போன்ற வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பது சிறையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in