20 நாட்களாக தெருவில் இருந்த இளம்பெண்; 21-வது நாளில் கணவரின் வீட்டு கதவு உடைப்பு: வாழ்க்கை போராட்டம் நடத்தும் மனைவி

பிரவீனா
பிரவீனா

தன்னை வீட்டுக்குள் விடாமல் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிட்ட கணவன் வீட்டார் வருவார்கள் என  20 நாட்களாக வீட்டிற்கு வெளியே  காத்திருந்த இளம்பெண் 21-ம் நாளில் ஊர் மக்கள் உதவியுடன் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றார்.

திருவாரூர் மாவட்டம், பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகள் பிரவீனா. இவருக்கும் மயிலாடுதுறை மன்னம்பந்தல் தெற்குவெளியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நடராஜன் என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணமானது. 24 பவுன் நகை, ராயல் என்பீல்டு இருசக்கர வாகனம் மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் சீர்வரிசையுடன் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

மூன்று மாதங்கள்  இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் மேலும்  வரதட்சணை கேட்டு பிரவீனாவை கணவன் வீட்டார் கொடுமை செய்துள்ளனர். சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் நடராஜன், பிரவீனாவை இங்கு  விட்டுவிட்டு அங்கேயே தங்கிவிட்டாராம்.  கணவர் வீட்டில் இல்லாத நிலையில் கணவரின் தம்பி சதீஷ் பிரவீனாவுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகிறது. 

இது பற்றியும்,  தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவது குறித்தும் பிரவீனா கணவரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவரது பேச்சை நடராஜன் பொருப்படுத்தவே இல்லையாம்.  மயிலாடுதுறைக்கும் வரவில்லையாம்.  ஒரு கட்டத்தில் பிரவீனாவை வீட்டில் இருந்து வெளியேற்றிய நடராஜன் வீட்டார் தங்கள்  மகன் உன்னுடன் வாழமாட்டான் என்று கூறி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.  

இதனால்  தன் கணவரை கண்டுபிடித்து தன்னுடன்  வாழ வைக்ககோரி  பிரவீனா, கணவர் வீட்டு வாசலிலேயே  20 நாளாக காத்திருக்கிறார். இதனால்  ஊர்ப்  பஞ்சாயத்தார்கள்  நடராஜன் குடும்பத்தினரிடமும் இதுகுறித்து பேசியிருக்கின்றனர்.  ஆனாலும் அவர்கள் ஒத்துவரவில்லை. இதனால் நேற்று முன் தினம்  மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜிடம் ஊர்  பொதுமக்களுடன் சென்று  பிரவீனா புகார் மனு அளித்தார். 

அப்படியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் நேற்று இரவு  பொதுமக்கள் முன்னிலையில் கடப்பாரையால் வீட்டின் பூட்டை உடைத்து தனது புகுந்த வீட்டில் மீண்டும் புகுந்தார் பிரவீனா. "எனது கணவர் இதுநாள் வரை எங்கிருகிறார் என்று தெரியவில்லை. எதனால் என்னை வீட்டைவிட்டு வெளியேற்றினார்கள், என்னை ஏன் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்றும் தெரியவில்லை. எனது கணவரை கண்டுபிடித்து கொடுத்து என்னை அவருடன் வாழவையுங்கள்.  என் கணவர் வந்து என்னுடன் வாழப்பிடிக்கவில்லை என்று கூறினால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன்"  என்று கூறும் பிரவீனா தனி மனுஷியாக தன் போராட்டத்தை தொடர்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in