காதலிக்க சொல்லி டார்ச்சர்... தவறான செயலால் மறுத்த கல்லூரி மாணவி: கழுத்தை அறுத்துக் கொன்ற மாமன் மகன்

காதலிக்க சொல்லி டார்ச்சர்... தவறான செயலால் மறுத்த கல்லூரி மாணவி: கழுத்தை அறுத்துக் கொன்ற மாமன் மகன்

தன்னுடைய சொந்த மாமன் மகள் தன்னை காதலிக்க மறுத்ததால் கோபமடைந்த இளைஞர், அந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் புதுச்சேரியை பதை பதைக்க வைத்துள்ளது.

புதுச்சேரி மாநிலம், திருபுவனை அருகே சன்னியாசிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அந்த 18 வயது பெண் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். அவருடைய அத்தை மகன் ஒருவர் இந்த மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்திருக்கிறார். ஆனால் அவரின் நடத்தை பிடிக்காததால் அதற்கு அம்மாணவி மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார். ஆனாலும் அந்த இளைஞர் தன்னை காதலிக்க வேண்டும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மாணவியிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்றிருந்த மாணவி கல்லூரி முடிந்து வீடு திரும்பி இருக்கிறார். சன்னியாசிக்குப்பம் கடை வீதியில் இறங்கி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த அந்த இளைஞர் தன்னை காதலிக்க வேண்டும் என்று மாணவியிடம் தகராறு செய்திருக்கிறார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்த நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை ஆத்திரத்துடன் வெட்டத் தொடங்கினார்.

இதில் மாணவியின் கழுத்து கை, கால் பகுதியில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இதில் நிலைகுலைந்த மாணவி அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அதைப் பார்த்ததும் பதறிப்போன அங்கிருந்தவர்கள் மாணவியை காப்பாற்றும் நோக்கில் ஓடி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அதன்பின்னர் மாணவியை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் மாணவியை பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த திருபுவனை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளியை தேடி வருகின்றனர். அந்த இளைஞர் மீது, ஏற்கெனவே திருவண்டார் கோயில் பகுதியில் உள்ள மதுபான கடையில் பாம் வீசிய வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in