
கோவையைச் சேர்ந்த இளம்பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, மார்பிங் வீடியோக்களை வெளியிட்ட இளைஞரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் துடியலூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு தன்னை ஆபாசமாக மார்பிங் செய்து வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார். மேலும், தனது தந்தையின் ட்விட்டர் பக்கத்திலும் மேற்கண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடப்பட்டிருந்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுபோன்று சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கூறி புகார் அளித்தார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து இக்குற்றத்தில் தொடர்புடைய கோவை காந்தி பார்க் பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார் (22) இன்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய செல்போன், சிம் கார்டு மற்றும் பென்டிரைவ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.