
தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில பாப்ஸ்கோ ஊழியர்கள் வயிற்றில் ஈரத்துணியை போட்டுக்கொண்டு புதுச்சேரி சட்டமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் அரசுத்துறை நிறுவனம் பாப்ஸ்கோ செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1000 பேர் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 55 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், இங்கு வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சட்டமன்றத்திற்கு முன்பாக மிஷின் வீதி மாதாகோவில் எதிரில் வயிற்றில் ஈரத்துணியைப் போட்டு இரண்டாவது நாளாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு வழங்க வேண்டிய 55 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். பணி ஓய்வில் சென்ற தொழிலாளர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கி ஓய்வு கால பணப்பலன்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்ஸ்கோ நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கி மாதம் தவறாமல் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.