
கோவையில் நிதி நிறுவன மோசடி வழக்கில் பல மாதங்களாக தலைமறைவாக இருந்த பெண் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் டி மேக்ஸ் கேப்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதன் நிர்வாக இயக்குநர்களாக செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகியோர் இருந்து வந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு இந்நிறுவனம் பல்வேறு கவர்ச்சிகரமான நிதி முதலீட்டுத் திட்டங்களை அறிவித்தது.
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 17.5 சதவீதம் வட்டியாக சேர்த்து 100 நாட்கள் கழித்து ரூ.2 லட்சம் பணமும், கூடுதலாக 2 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர். அதேபோல மற்றுமொரு திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 20 சதவீதம் வீதம் வட்டி சேர்த்து 12 மாதங்கள் கழித்து ரூ.2,40,000/- மாக திரும்ப கொடுப்பதாகவும் கூறி மக்களிடம் இருந்து முதலீட்டை பெற்றனர்.
இதை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்திருந்த நிலையில் முதிர்வு காலம் முடிந்தபிறகும் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களை ஏமாற்றிவிட்டதாக இந்த நிறுவனம் மற்றும் அதை நடத்திவந்த நிர்வாக இயக்குநர்கள் மீது புகார்களின் பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு செந்தில்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி லலிதா தலைமறைவானார்.
இவ்வழக்கில் பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த அதன் நிர்வாக இயக்குநரான லலிதா (28) இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.