உயிர் பயத்தில் வீட்டை விட்டு ஓடிய கணவன்: துரத்திச் சென்று குத்துவிளக்கால் கொன்ற மனைவி

கொலை
கொலை

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தில் குத்துவிளக்கால் அடித்தே கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் சிவத்தையாபுரம் பன்னீர் செல்வம் தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (48) கூலித் தொழிலாளி. இவரது மனைவி சந்திரமதி (37). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சந்திரமதி தன் கணவரைக் குத்துவிளக்காலேயே அடித்துக் கொலை செய்தார். முதலில் வீட்டில் இருந்த குத்துவிளக்கால் தன் கணவரை திடீரென சந்திரமதி சரமாரியாகத் தாக்கினார். ஒருகட்டத்தில் உயிர்பயத்தில் வீட்டை விட்டு வெளியே இறங்கி ஓடிய பொன்ராஜை பின் தொடர்ந்து சென்ற சந்திரமதி, அவரை சாக்கடைக்குள் தள்ளிவிட்டு தாக்கினார். அக்கம், பக்கத்தினர் வந்து பொன்ராஜை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

சந்திரமதி கடந்த சிலவாரங்களாகவே தன் வீட்டில் இருக்கும் பூரி கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் பொன்ராஜை தாக்கி வந்திருக்கிறார். சந்திரமதி மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தன்னைத் தொடர்ந்து தாக்கி வருவதாகவும் பொன்ராஜ் பலமுறை காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் வழக்கமான கணவன், மனைவி சண்டை என இருதரப்பையும் போலீஸார் சமரசம் செய்து அனுப்பி வந்தனர். இந்நிலையில் தான் பொன்ராஜை குத்துவிளக்கால் தாக்கி, தன்னையே அறியாமல் கொலை செய்திருக்கிறார் சந்திரமதி.

வீட்டிற்கு குத்துவிளக்கு ஏற்ற வந்த வாழ்க்கைத்துணையே, தன் கையால் குத்துவிளக்கால் அடித்தே கொன்று, கணவர் உயிர் நீத்த சம்பவம் அப்பகுதிவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in