மகனை பீர்பாட்டிலால் குத்திய கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி!

அமுதா
அமுதா

போதையில் பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் குத்திய தனது கணவனை அவரது மனைவியே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகேயுள்ள கொற்கை கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவன்(53). இவரது மனைவி அமுதா (37). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகாதேவன் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதும், மனைவியை அடிப்பதுமாக இருந்திருக்கிறார். அப்படி மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த சண்டையில் மனைவியின் வலது கையை உடைத்து இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு மனைவியிடம் சண்டையிட்டு 500 ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு சென்று குடித்திருக்கிறார். அத்துடன் வீட்டில் வந்து சாப்பிடுவதற்காக இரண்டு பீர் பாட்டில்களையும் கையோடு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். வந்தவர் குடி போதையில் மனைவியிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். அவரை அடிக்கவும் செய்திருக்கிறார்.

கணவன் மகாதேவனுடன் அமுதா.
கணவன் மகாதேவனுடன் அமுதா.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மூத்த மகன் ராஜராஜ சோழன் அம்மாவை ஏன் அடிக்கிறாய் என்று தந்தையை எதிர்த்து கேட்டாராம். அதனால் கோபம் தலைக்கேறிய மகாதேவன் தான் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் குத்த முயற்சித்திருக்கிறார். அவர் சாதுர்யமாக விலகிக் கொண்டார். ஆனாலும் பயனின்றி வயிற்றுப் பகுதியில் பாட்டில் கிழித்து விட்டது. அதில் லேசான காயம் ஏற்பட்டது.

அதனால் பதறிப்போய் ஓடிவந்த அமுதா கணவனைத் தடுக்க முயன்றார். அதனால் மகாதேவன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அமுதாவை வெட்ட வந்திருக்கிறார். அவரது கையிலிருந்த அரிவாளைப் பிடுங்கிய அமுதா கோபத்தில் கணவனைத் திருப்பி வெட்டியிருக்கிறார். இதனால் கழுத்தில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த மகாதேவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதனையடுத்து தன் மகனுடன் மணல்மேடு காவல் நிலையத்திற்கு வந்த அமுதா கணவன் கொலை செய்யப் பட்டதைச் சொல்லி ஆஜரானார். காவல்துறையினர் உடனடியாக அமுதாவின் வீட்டிற்கு சென்று சடலத்தை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
குடிபோதையில் தன்னையும், மகனையும் தாக்கிய கணவனை மனைவியே கொலை செய்தது சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in