ஒரே நாளில் நீர்மட்டம் 5 அடியாக உயர்வு... 110 அடியை எட்டியது மேட்டூர் அணை: மகிழ்ச்சியில் டெல்டா விவசாயிகள்

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் தொடர்ந்து வரும் அதிக அளவு நீரால் இன்று காலை 110 அடியை எட்டியுள்ளது மேட்டூர் அணை.

தென்மேற்கு பருவ மழை காரணமாக, கர்நாடகத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரளத்தில் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதையடுத்து, இந்த அணைகளுக்கு வரும் மொத்த நீரும் அப்படியே காவிரியில் திறந்து விடப்படுகிறது.

நேற்று முன்தினம் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 38 ஆயிரம் கன அடி நீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்பட்டது. அதனால் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் தமிழக பகுதிக்கு வந்தது. இதையடுத்து நேற்று அணையின் நீர்மட்டம் 105 அடியாக உயர்ந்தது.

நேற்று 86,707 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் 85,129 கன அடியாக குறைந்துள்ளது. இந்த நிலையில் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 110.41 அடியாக உள்ளது. அணையிலிருந்து 15,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 78 டிஎம்சியாக உள்ளது. இதே அளவு நீர்வரத்து இருந்தால் நாளை மறுதினம் அணையின் முழு கொள்ளளவான 120 அடியும் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு டெல்டா பகுதி விவசாயத்திற்காக முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு குருவை சாகுபடி முழுமையான பரப்பளவில் நடைபெற்று வருகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் சம்பா சாகுபடியும் இந்த ஆண்டு தண்ணீருக்கு குறைவின்றி சிறப்பாகவே இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in