
அமலாக்கத் துறை சோதனை காரணமாக தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இல்லாமலேயே திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 29-வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து பட்டங்களை வழங்குவார் என்றும், உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத் தலைவர் பிபேக் டெப்ராய் பட்டமளிப்பு விழா உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அமலாக்கத் துறை சோதனை காரணமாக, உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி விழாவில் கலந்து கொள்ளவில்லை. இணை வேந்தரான உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இல்லாமல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து பட்டங்களை வழங்கினார்.
இதில், 2021-2022-ம் கல்வியாண்டில் மொத்தம் 43,861 பேர் பட்டம் பெற்றனர். இவர்களில் முனைவர் பட்டம் பெறும் 948 பேர், பதக்கங்கள் பெறும் 105 பேர் என மொத்தம் 1,053 பேர் ஆளுநரிடம் இருந்து நேரடியாக பட்டங்களைப் பெற்றனர்.