திருடிய வண்டி வழியில் பழுது: போலீஸ் உடையில் மாற்று பைக்கைத் திருடிய திருடன்!

திருடிய வண்டி வழியில் பழுது: போலீஸ் உடையில் மாற்று பைக்கைத் திருடிய திருடன்!

பேருந்து நிலைய வாசலில் திருடிய பைக் நடுவழியில் பழுதானதால் போலீஸ் சீருடையில் வந்து, நூதனமுறையில் ஏமாற்றி மாற்று பைக்கை வாலிபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், திருப்பதிசாரம் கிராமம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பெர்னாட். இவர் திருநெல்வேலி- நாகர்கோவில் பைபாஸில் திருப்பதிசாரம் பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது பெட்டிக்கடைக்கு போலீஸ் சீருடையில் வந்த ஒருவர் தான் ஓட்டிவந்த பைக்கை நிறுத்திவிட்டு, என் பைக்கில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது. உன் பைக்கை கொஞ்சம் கொடு எனக் கேட்டுள்ளார்.

அந்த வாலிபர் போலீஸ் சீருடையில் இருந்ததால் பெர்னாட் தன் பைக்கை கொடுத்தார். ஆனால், பைக் வாங்கிச் சென்றவர் வெகுநேரமாகியும் திரும்பிவரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெர்னாட், இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக் காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர் போலீஸே இல்லை எனத் தெரிந்தது. ஏற்கெனவே வடசேரி பேருந்து நிலையம் பகுதியில் இருந்து அந்த வாலிபர் ஒரு பைக்கைத் திருடி உள்ளார். அது வழியிலேயே ரிப்பேர் ஆனதால், பெர்னாடை ஏமாற்றி அவரது பைக்கை வாங்கிச் சென்றதும் தெரியவந்தது. இந்த நூதனமோசடி குறித்து வடசேரி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in