பல வீடுகளில் கைவரிசை; வாகனச் சோதனையில் சிக்கிய பலே திருடன்: 45 பவுன் நகைகள் மீட்பு

பல வீடுகளில் கைவரிசை; வாகனச் சோதனையில் சிக்கிய பலே திருடன்: 45 பவுன் நகைகள் மீட்பு

சிதம்பரம் நகரில்  நடைபெற்ற வாகன சோதனையின்போது  பல இடங்களில் திருடிய பலே திருடன் சிக்கியதை அடுத்து அவனை கைது செய்துள்ள போலீஸார் அவனிடமிருந்து  45 பவுன் நகையையும் மீட்டுள்ளனர்.

சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்,  சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீஸார் நேற்று இரவு  காந்தி சிலை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில்  வந்த ஒரு இளைஞரை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது  அவர் முன்னுக்குப் பின்னும் முரணாக பதில் அளித்தார்.  

இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில்  சிதம்பரம் சின்ன கடைத்தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் வெங்கடேஷ்( 23)  என்ற அந்த  நபர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடைபெற்ற விசாரணையில் அண்மையில் அவர் திருடிய இடங்கள் குறித்தும் தெரியவந்தது.

சிதம்பரம் பள்ளிப்படையைச் சேர்ந்த ஜகபர்அலி(56) என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையையும்,  அதே பகுதியில் முத்துக்குமாரன் மனைவி கலைவாணி என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளையும்  திருடியிருக்கிறார். அதேபோல சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெருவில் உள்ள பெட்டிக்கடையில் நின்று கொண்டிருந்த அன்னாள் கஸ்பால் என்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை சங்கிலியை பறித்துள்ளார். 

சிதம்பரம் எஸ்.பி கோயில் தெருவில் சாலை ஓரம் நின்றிருந்த மாலிக் பாஷா என்பவருடைய இரு சக்கர வாகனத்தையும்  திருடியுள்ளார்.  இதையடுத்து வெங்கடேசை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 45 சவரன்  நகைகள் மற்றும்  இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in