
முறைதவறிய காதலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய இருந்த வாலிபர் மீது, கொதிக்கும் எண்ணெயைத் தூக்கி ஊற்றிய இளம்பெண் இன்று கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், பவானி வர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(26) என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் பூபதியின் மனைவி மீனாதேவி(27). இந்தத் தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. கார்த்திக்கும், மீனாதேவியும் ஒரே கல்லூரியில் படித்தவர்களாம். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் மீனாதேவிக்கு பூபதியோடு திருமணம் நடந்தது. பூபதி தன் உறவினர் என்பதை பயன்படுத்தி அடிக்கடி கார்த்திக் அவர் வீட்டிற்கு செல்வார். அப்போது மீனாதேவிக்கும், அவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. இது ஒருகட்டத்தில் கூடா உறவாகவும் மாறியது.
இதனிடையே கார்த்திக்கிற்கு சமீபத்தில் வேறு ஒரு பெண்ணோடு திருமணம் நிச்சயம் ஆனது. இதனால் மீனாதேவி கோபம் அடைந்தார். இந்நிலையில் நேற்றுமாலை திடீரென கார்த்திக்கிற்கு போன் செய்த, மீனாதேவி தன் வீட்டிற்கு வருமாறும், கணவர் பூபதி இல்லை என்றும் அழைத்தார். கார்த்திக் வீட்டிற்குச் சென்றார். அப்போது கார்த்திக்கிடம் மீனாதேவி, என்னை மறந்துவிட்டு இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்யப் போகிறாயா? எனக் கேட்டுத் தகராறு செய்தார்.
அப்போது அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த பாமாயிலைத் தூக்கி கார்த்திக் மேல் வீசினார். இதில் அவரது கழுத்து, முகுகு, மார்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. 15 சதவீத தீக்காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பவானி போலீஸார், மீனாதேவியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.