'டீ கடைக்காரன் தலையை வெட்டி ஸ்டேஷன்ல கொண்டு வந்து வைப்பேன்'… கஞ்சா போதையில் போலீஸாரை மிரட்டிய வாலிபர்: வீடியோ வைரலானதால் பரபரப்பு

'டீ கடைக்காரன் தலையை வெட்டி ஸ்டேஷன்ல கொண்டு வந்து வைப்பேன்'… கஞ்சா போதையில் போலீஸாரை மிரட்டிய வாலிபர்:  வீடியோ வைரலானதால் பரபரப்பு

சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் கஞ்சா போதையில் டீ கடைக்காரரைக் கொலை செய்வேன் என்று மிரட்டிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை பாண்டி பஜார் பாரதி நகரில் அமைந்துள்ள ஒரு டீ கடைக்கு வாலிபர் ஒருவர் நேற்று டீ அருந்தச் சென்றார். அங்கு டீ, பிஸ்கட் சாப்பிட்ட பிறகு பணம் தராமல் டீக்கடை உரிமையாளரிடம் அந்த வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து டீ கடை உரிமையாளர் அளித்த தகவலின் பேரில், பாண்டிபஜார் போலீஸார் சம்பவ இடத்திற்கு,ச சென்று அந்த வாலிபரைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். தகராறில் ஈடுபட்ட வாலிபர் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ரமேஷ்(25) என்பது தெரிய வந்தது.

பாண்டிபஜாரில் திருநங்கையைப் பார்ப்பதற்காக வந்த அவர் அங்குள்ள டீ கடையில் பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் தந்தையிடம் சென்று பணம் வாங்கி வந்து கொடுப்பதாக ரமேஷ் கூறியதை அடுத்து போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு தனது தந்தையுடன் கஞ்சா போதையில் வந்த ரமேஷ், திடீரென கையில் வைத்திருந்த பிளேடால் கையைக் கிழித்து கொண்டு போலீஸாரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். மேலும் தன்னை முடிந்தால் கைது செய்து பாருங்கள், நான் ரவுடியின் மகன் என மிரட்டினார்.

மேலும் என் மீது எந்த தவறும் இல்லை எனவும், நாளைக்கு டீ கடைக்காரனின் தலையை வெட்டி காவல் நிலையத்தில் கொண்டு வந்து வைப்பேன் என மிரட்டல் விடுத்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனையடுத்து பாண்டி பஜார் போலீஸார், ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் அவர் கஞ்சா போதையில் இருந்ததால் அவரையும், அவரது தந்தையும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அனுப்பி வைத்தனர். வாலிபரின் இந்த செயலால் நேற்று இரவு காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in