`கருணாநிதி உடனே அறிவிப்பார்; ஆனால் நீங்கள்..!- முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தும் ஆசிரியர்கள்

`கருணாநிதி உடனே அறிவிப்பார்; ஆனால் நீங்கள்..!- முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தும் ஆசிரியர்கள்

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை சுதந்திர தினத்தன்று கோட்டையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். அதற்கு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் சே.நீலகண்டன் கூறுகையில், "இந்திய நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 01.07.2022 முதல் 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். வழக்கமான நடைமுறையை சற்று தாமதமாக அறிவித்திருந்தாலும் மகிழ்வையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே வேளையில் மத்திய அரசு 2022 ஜனவரி முதல் வழங்கியுள்ள அகவிலைப்படியை, 2022 ஜூலை முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது ஆசிரியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வுக்கேற்ப வழங்கப்படும் அகவிலைப்படி என்பது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றாகும். அதையே காலம் தாழ்த்தி வழங்குவதே அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகண்டன்
நீலகண்டன்

எனவே தற்போது வழங்கப்பட்டுள்ள அகவிலைப்படியை 01.01.2022 முதல் அறிவிக்க வேண்டும். ஏற்கெனவே ஜனவரி மாதம் 31 சதவீதமாக உயர்த்தி வழங்கியபோதே நிதி நிலையை காரணம் காட்டி அகவிலைப்படியை தாமதமாக அறிவித்து, அகவிலைப்படி நிலுவையும் வழங்கப்படவில்லை. எனவே தற்போதும் அதைப் போன்றதொரு நடைமுறை பின்பற்றப்படுவது ஏற்புடையதாக இல்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி மத்திய அரசு அகவிலைப்படியை அறிவிக்கும் பொழுதெல்லாம் அதைப் பின்பற்றி உடனடியாக அறிவித்துவந்தார். எனவே அதையே பின்பற்றி அகவிலைப்படி உயர்வினை அறிவிக்க வேண்டும். 01.01.2022 முதல் அகவிலைப்படி உயர்வினை அளித்து அதற்கான நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in