`நமது ஒழுக்கம் இவ்வளவு தாழ்ந்துபோகும் என நினைத்ததில்லை'

கரோனா உயிரிழப்பு நிதி முறைகேட்டால் உச்சநீதிமன்றம் வேதனை
`நமது ஒழுக்கம் இவ்வளவு தாழ்ந்துபோகும் என நினைத்ததில்லை'

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர்கள் ரீபக் கன்சல் மற்றும் கவுரவ் குமார் பன்சால் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஜூன் 30ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது, அதன்படி, கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை 6 வாரங்களுக்குள் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் வகுக்க வேண்டும் மற்றும் அதனை உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என கூறியது. மேலும் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி பேரிடரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது உட்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்குவது கட்டாயம் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவது எவ்வளவு என்பது குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதன்படி, கரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கலாம் என மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. இதுமட்டுல்லாமல், கரோனா பேரிடரை கையாளும் பணியின் போதும், நிவாரண பணிகளின் போதும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் இந்த இழப்பீடு தொகையை அளிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டு தொகை மாநிலங்கள் சார்பில், மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தால் வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்தது. அதன்படி மாநில அரசுகள், கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், நிதியுதவி பெற போலியாக கரோனா இறப்பு சான்றிதழ் தயாரிக்கப்பட்டு நிவாரணம் பெறப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கரோனாவால் இறந்தோரின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு தர சொல்லியுள்ளோம். ஆனால் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு தர சொல்லவில்லை. கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிதியை பெற போலிச் சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. நமது ஒழுக்கம் இவ்வளவு தூரம் தாழ்ந்துபோகும் என நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. கரோனா இழப்பீடு பெற போலி ஆவணம் தருவது பற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டியது அவசியமாகிறது என்று கூறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in