இந்தியாவில் சிகரெட் அதிகம் புகைப்பது எந்த வயதினர்?: டெல்லி நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்தியாவில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களே அதிகம் பயன்படுத்துவதாக டெல்லி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் கணக்கின் படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 லட்சம் பேர் புகையிலை பயன்பாட்டின் மூலம் மரணம் அடைகின்றனர்.
இதில் 12 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்தாமலேயே, புகையிலை பயன்படுத்தபவர்களால் இறக்கின்றனர். இந்த நிலையில் புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், உலக சுகாதார அமைப்பு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கிறது.
இந்த நிலையில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு டெல்லியைச் சேர்ந்த வல்லபாய் படேல் செஸ்ட் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏப்.30-ம் தேதி வரை மொத்தம் 71,39,473 தொலைபேசி அழைப்புகளை ஆய்வு இந்த நிறுவனம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி புகையிலை நுகர்வோரில், 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே அதிகம் உள்ளனர். அதன்படி 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,74,097 பேர் புகையிலைப்பொருட்களை அதிகம் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 98 சதவீதம் ஆண்களும், 5 சதவீதம் திருநங்கைகளும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், அதே சமயம் பெண்கள் மிகக் குறைந்த சதவீதத்தில் தான் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.