
"பணிமனையில் தேவையான அளவுக்கு ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் இல்லை, நானே ஏழு நாளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்" என்று அரசுப் பேருந்து நடத்துனர் ஒருவர் மாணவர்களிடம் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் அரசுப்பேருந்து மருதகோன்விடுதி அரசு கல்லூரி வழியாக சென்று வருகிறது. இந்த பேருந்தில் மருதகோன்விடுதி கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் சென்று வருவார்கள். இந்த நிலையில் இந்த பேருந்து மதியம் 2 மணிக்கு வர வேண்டிய நிலையில் இன்று 3 மணிக்குத்தான் வந்திருக்கிறது. இன்று மட்டுமில்லாமல் இதேபோல கடந்த சில நாட்களாகவே கால தாமதமாகவே வருவதாக கூறப்படுகிறது.
அதனால் பேருந்து இன்று தாமதமாக வந்ததையடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் காலதாமதமாக வருவது குறித்து மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேருந்து தாமதமாக வருவதால் தாங்கள் அவதிப்படுவதாகவும், ஏன் பேருந்து உரிய நேரத்தில் வரவில்லை என்று மாணவர்கள் கேட்டனர். அப்போது ஓட்டுநர் முறையாக பதிலளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் நடத்துனரிடம் சென்று கேட்டபோது, " பணிமனையில் போதுமான ஓட்டுநர்கள், நடத்துனர்கள் இல்லை, அதனால் பேருந்து காலதாமதமாகத்தான் வரும். விருப்பம் இருந்தால் ஏறுங்கள், இல்லையேல் அடுத்த பேருந்தில் ஏறுங்கள்" என்று கூறியிருக்கிறார். அதோடு "நானே ஏழு நாளாகத் தொடர்ந்து பேருந்தில் பணியாற்றி வருகிறேன் என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்? வேண்டுமென்றால் பஸ்சை மறித்துப் போடுங்கள்" என்று மாணவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைத்தொடர்ந்து பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்து பேருந்து அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்ளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.