வேலூரில் 10ம் வகுப்பு மாணவன், பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காலாம்பட்டு கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலைப் பார்த்து வரும் இவரது மகன் சூர்யா, அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் மதியம் 1.50 மணிக்கு தமிழ் பாட வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தனக்கு நெஞ்சு வலிப்பதாக சூர்யா கூறியுள்ளார். சிறிது நேரத்தில் சூர்யா, முன்பக்க மேஜை மீது மயங்கி விழுந்து அசைவற்று கிடந்ததால் அருகில் இருந்த மாணவர்கள் உடனடியாக ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சூர்யாவின் பெற்றோருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்சில் வந்த மருத்துவ குழுவினர் மாணவனை பரிசோதனைச் செய்துப் பார்த்து, நாடிதுடிப்பு குறைவாக உள்ளது என தெரிவித்தனர். இதனால் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் சிறுவன் வழியிலேயே உயிரிழந்து விட்டான்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியார் கூறியதாவது, ’’ஏற்கனவே சூர்யாவிற்கு 8 வயது மற்றும் 12 வயதிலும் இரு முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வகுப்பில் பலவீனமாக இருந்த சூர்யா, யாரிடமும் கடுமையாக நடந்து கொள்ள மாட்டார். மேலும் நெஞ்சுவலி இருப்பதால் சூர்யா பள்ளிக்கும் தொடர்ந்து வருவதில்லை.
அவ்வபோது விடுமுறை எடுப்பார். அறுவை சிகிச்சை செய்த பிறகு மருந்து மாத்திரைகளை எடுத்து வந்ததாக தெரிகிறது. வகுப்பறையில் எங்கள் முன்னிலையில் சூர்யா இறந்தது வேதனை அளிக்கிறது’’ என தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.