`அக்டோபர் 24-ல் புயல் வலுப்பெறும்; 32 மாவட்டங்களில் கனமழை பெய்யும்'- வானிலை மையம் தகவல்

`அக்டோபர் 24-ல் புயல் வலுப்பெறும்; 32 மாவட்டங்களில் கனமழை பெய்யும்'- வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வலுவடைந்துள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 24-ம் தேதி புயலாக உருவாகும் என்றும் இன்று 32 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று காலை அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அக்டோபர் 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வரும் 23-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். பிறகு வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புயலாக 24-ம் தேதி வலுப்பெறக்கூடும். பிறகு 25-ம் தேதி மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் 22-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலும் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 23-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 24-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்" என கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in