தனியாளாக 4 கி.மீ தூரம் சுடுகாட்டிற்கு தாயின் உடலை எடுத்துச் சென்ற மகன்: மணப்பாறையில் அதிர்ச்சி சம்பவம்

சக்கர நாற்காலியில்  ராஜேஸ்வரியின் உடல்
சக்கர நாற்காலியில் ராஜேஸ்வரியின் உடல்

இறந்த தனது தாயை தனி ஒருவராக சக்கர நாற்காலியில் வைத்து இடுகாட்டுக்கு மகன் எடுத்துச் சென்ற சம்பவம் மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார் நகரில் வசித்து வந்தவர் பெரியசாமி மனைவி ராஜேஸ்வரி. 74 வயதான இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தோல் நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரது மகன் முருகானந்தம் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் மூதாட்டி இன்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயாருக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதி காரியங்களை செய்யவும் ஊர்காரர்கள் யாரும் வரமாட்டார்கள் என்று தானாகவே முடிவு செய்து கொண்ட முருகானந்தம் ஊரில் யாருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. இறந்தவர்களுக்கு செய்யப்படும் எந்த சடங்கையும் அவர் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

அதனால் சக்கர நாற்காலியை எடுத்து வந்த முருகானந்தம், அதில் தனது தாயாரைத் தூக்கி வைத்து, இடுப்புப்பகுதி, கைகள், கால்கள் ஆகியவற்றை சக்கர நாற்காலிகோடு சேர்த்து கட்டினார். நாற்காலியில் தனது தாயார் இருப்பது தெரியாமல் இருப்பதற்காக அவரின் மேல் ஒரு புடவையை போட்டு சுற்றினார். அதன்பின் சக்கர நாற்காலியை தனது இல்லத்தில் இருந்து செவலூர் பகுதியில் இருக்கும் மயானம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தனி ஒருவராக தள்ளிச் சென்றிருந்திருக்கிறார்.

மயானத்திற்கு சென்றவர் அங்கிருந்த ஊழியரிடம் தனது தாயை ஏரியூட்ட வேண்டும் என்று கேட்டபோது மேளம் இல்லை, உற்றார் உறவினர்கள் இல்லை, பாடையோ, வண்டியோ இல்லை, பிறகு எப்படி தாயை தூக்கி வந்தீர்கள் என்று அவர் கேட்டிருக்கிறார். அப்போதுதான் தோல் நோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு இறுதி சடங்கு செய்ய யாரும் வரமாட்டார்கள் என்று முருகானந்தம் கூறியிருக்கிறார். அதனையடுத்து முருகானந்தத்தின் உதவியுடன் மயானத்தில் இருந்த ஊழியர், ராஜேஸ்வரி உடலை எரியூட்டி இருக்கிறார். இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற தாயை உற்றார் உறவினர் இன்றி, உரிய இறுதிச் சடங்குகள் செய்யாமல் அவரது மகன் இடுகாட்டுக்கு கொண்டு சென்று எரியூட்டிருப்பது மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in