உயிருக்கு போராடிய தந்தை; 3 கிமீ தூரம் தூக்கி சென்ற மகன்: மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்த துயரம்

இறப்பு
இறப்புOWNER

கன்னியாகுமரி மாவட்டத்தின் பழங்குடி காணி குடியிருப்பில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட தந்தையை உரிய சாலை வசதி இல்லாததால் மகன் தூக்கிக் கொண்டு நடந்துசென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையின் மறுகரையில் காணி என்னும் பழங்குடி சமூக மக்கள் வசிக்கின்றனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மார்த்தாண்ட வர்மா, இம்மக்களுக்கு கானத்தில் வசிப்பதற்கு இடம் கொடுத்தார். மன்னர் கொடுத்த காணிக்கு சொந்தக்காரர்கள் என்பதால் இவர்கள் காணிக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்த குடியிருப்புகளுக்கு இன்னும் உரிய சாலை வசதி இல்லை. இவர்களில் யாருக்கேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் கரடு, முரடான மலைப்பாதை வழியாக தூக்கிச் சென்றே சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியும்.

இந்நிலையில் கோலஞ்சி மடம் காணிக் குடியிருப்பைச் சேர்ந்த வேலு காணி(47) என்பவருக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஏற்கெனவே சர்க்கரை நோயால் தீவிர பாதிப்பிற்குள்ளான வேலு கடும் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரது மகன் விக்னேஷ் தோளில் தூக்கிச் சென்று 3 கிலோ மீட்டர் தூரம் கானகத்தைக் கடந்து பேச்சிப்பாறை வந்து சேர்ந்தார். அங்கிருந்து ஒரு காரில் ஏற்றி பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு வேலுகாணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். காணிக் குடியிருப்பில் உரிய சாலை வசதி இல்லாததால் தாமதமாக சிகிச்சைக்கு வந்து சேர்ந்து வேலு உயிரிழந்த சம்பவம் காணிக் குடியிருப்புகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in