தாய்க்கும்,பாட்டிக்கும் தீவைத்த இளைஞர் நெருப்பில் சிக்கினார்: ராணிப்பேட்டையில் சோகம்

அசோக்குமார்
அசோக்குமார் தாய்க்கும்,பாட்டிக்கும் தீவைத்த இளைஞர்: நெருப்பில் சிக்கிய அதிர்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த தனது தாய் மற்றும் பாட்டியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தவர், தானும் தீவைத்துக் கொண்டதில் எரிந்து உயிரிழந்தார். 

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள பாணாவரம் அடுத்த மேலேரி பகுதியைச் சேர்ந்த பழனி - யசோதா தம்பதியின் மகன் அசோக்குமார் ( 24). ஐடிஐ முடித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த அசோக்குமார், மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அசோக்குமாரின் தாயார் யசோதா மற்றும் பாட்டி வள்ளியம்மாள் (80) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது  வீட்டிலிருந்த  அசோக்குமார் இருவரின் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.

பின்னர் அசோக்குமார் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீயை வைத்துக் கொண்டார். அந்த வீட்டிலிருந்து எழுந்த தீயும், புகையும்,  கூக்குரலும் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மூன்று பேர் மீதும் மணல் மற்றும் ஈர கோணிப்பையை போட்டு  தீயை அணைத்தனர்.  பலத்த தீக்காயங்களுடன் இருந்த அவர்களை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு முதலுதவி செய்யப்பட்டு மூவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த  நிலையில், இன்று காலை அசோக்குமார் உயிரிழந்தார். மேலும் யசோதா, வள்ளியம்மாள் ஆகியோர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பாணாவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in