மேற்கு வங்கத்திலிருந்து விழுப்புரம் வந்த ரயிலில் சிறுத்தையின் தோல்: கழிப்பறையில் வீசி சென்றவர்கள் யார்?

மேற்கு வங்கத்திலிருந்து விழுப்புரம் வந்த ரயிலில் சிறுத்தையின் தோல்: கழிப்பறையில் வீசி சென்றவர்கள் யார்?

ரயிலில் கடத்தி வரப்பட்ட சிறுத்தையின் தோலை  பறிமுதல் செய்த  ரயில்வே  போலீஸார் , அது  எங்கிருந்து, யாரால்  கடத்தி வரப்பட்டது என தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்

வெளி மாநிலங்கள் மற்றும்  வெளி மாவட்டங்களில் இருந்து தடை  செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, பான்பராக்  போன்ற போதைப் பொருட்கள், மதுபாட்டில்கள் ஆகியவை ரயிலில் கடத்தி வரப்படுகிறதா என விழுப்புரம் ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் விழுப்புரம் ரயில்வே நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை விழுப்புரம் ரயில்வே உதவி காவல் ஆய்வாளர் அசோகன் தலைமையில்  தலைமைக் காவலர்  வினோத்,  தனிப்பிரிவு தலைமை காவலர் ரவி உள்ளிட்டோர் ரயில்நிலைய வளாகம் மற்றும் ரயில் பெட்டிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மேற்கு வங்க மாநிலம்  கரக்பூரிலிருந்து   விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்த அதி விரைவு ரயிலில் ரயில்வே போலீஸார் ஏறி சோதனையிட்டனர். 

அப்போது அந்த ரயிலின்  பொதுப் பெட்டியில்  கழிவறை அருகேசாக்கு பை  ஒன்று கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. அதை கைப்பற்றிய போலீஸார் அதனை பாதுகாப்பாக திறந்து பார்த்தபோது அதன் உள்ளே சிறுத்தையின் தோல் ஒன்று இருப்பது தெரியவந்தது.

அந்த சிறுத்தை தோலை ரயில்வே காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீஸார் இது குறித்து உயர்  அதிகாரிகளுக்கு  தகவல் கொடுத்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தை  தோலை ரயிலில் கடத்தியவர்கள் யார்?  எங்கிருந்து, எங்கு கடத்தப் பட்டது என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை  நடத்தி வருகின்றனர். இந்த சிறுத்தையின் தோல்  10 லட்சம்  மதிப்பு  இருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in