பதவி உயர்வுபெற்ற ஆட்சியர் பைக்கில் வீடு திரும்பினார்!

கேரளத்தில் நடந்த நெகிழ்வான சம்பவம்
பதவி உயர்வுபெற்ற ஆட்சியர் பைக்கில் வீடு திரும்பினார்!
விடைபெறும் போது...

கேரளத்தின் கொல்லம் மாவட்ட ஆட்சியராக இருந்த அப்துல் நாசர், மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். இதைத் தொடர்ந்து புதிய ஆட்சியரிடம் பொறுப்புகளை ஒப்படைத்த அவர், அரசு காரை பயன்படுத்தாமல் தனது சொந்த பைக்கிலேயே வீட்டுக்குச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பைக்கில் திரும்பும் போது...
பைக்கில் திரும்பும் போது...

அப்துல் நாசர் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். அவருக்கு 7 மொழிகள் அத்துப்படி. மொழிகளை மட்டுமல்ல, வாழ்க்கையின் அத்தனை சூட்சுமங்களையும் அவருக்குக் கற்றுத் தந்தது – வறுமை!

கேரளத்தில் நடந்த ஒரு போராட்டத்தின்போது, கொடூரத் தாக்குதலில் தனது தந்தையை இழந்த அப்துல்நாசருக்கு அப்போது வெறும் 5 வயதுதான். அவரது தாய் மான்யும்மா ஹஜ்மா, அக்கம் பக்கத்தில் வீட்டு வேலைகள் செய்து குழந்தைகளை வளர்த்தார். அதையும் மீறிய வறுமை துரத்த அப்துல்நாசர் ஆதரவற்றோர் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டார். அங்குபட்ட கஷ்டங்களை முன்னிறுத்தி அவர் ஆசிரமத்தில் இருந்து சொல்லிக்கொள்ளாமல் பலமுறை வெளியேறி, உணவகங்களில் க்ளீனராக வேலைசெய்தார். இப்படிப் பலமுறை நாசரின் உறவினர்கள் அவரை உணவகங்களில் கண்டுபிடித்து, மீண்டும் படிக்க அனுப்பினார்கள். இப்படிப் பல விளிம்புநிலைத் தொழில்களையும் செய்து, அதனூடே ஐஏஎஸ் தேர்வு எழுதி வென்றவர் அப்துல் நாசர்.

தனது மனைவியுடன் அப்துல் நாசர்...
தனது மனைவியுடன் அப்துல் நாசர்...

கேரள அரசு, கொல்லம் மாவட்ட ஆட்சியராக இருந்த அப்துல் நாசருக்கு மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் இயக்குநராக பதவி உயர்வு அளித்தது. புதிய கொல்லம் ஆட்சியராக அப்சானா பர்வீன் நியமிக்கப்பட்டார். அவரிடம் நேற்று மாலையில் பொறுப்புகளை ஒப்படைத்த அப்துல்நாசர், அரசுக்குச் சொந்தமான காரை பயன்படுத்தாமல் தனது சொந்த மோட்டார் பைக்கிலேயே வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

நேற்று மாலை, கொல்லம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பிரிவு உபசார விழாவில் மனைவியுடன் கலந்துகொண்ட அப்துல் நாசர், தனது பைக்கில் மனைவியுடன் வீடு திரும்பினார். பைக்கின் பின் சீட்டில் இருந்த அப்துல் நாசரின் மனைவியும் ஹெல்மெட் அணிந்திருந்தார். ஆட்சியராக இருந்த அப்துல்நாசரின் இந்த எளிமையும் பொறுப்புணர்வும் அனைவரையும் வியக்கவைத்தது.

Related Stories

No stories found.