
மூடிய டாஸ்மாக் கடையில் மது கொடுக்காததால் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலை ஜெய் கார்டன் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு ஊழியர்கள் பணிமுடிந்து கடையை மூடிய பிறகு மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் வந்துள்ளார். அப்போது, 100 ரூபாய் கொடுத்து மது கேட்டுள்ளார். அதற்கு கடை ஊழியர் ராஜேந்திரன், கடை மூடிவிட்டதால் மது கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதனால், போதை ஆசாமி அவரிடம் தகராறு செய்துவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் மதுகடைக்கு வந்த அந்த போதை ஆசாமி , திடீரென கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை பற்ற வைத்து மதுக்கடை மீது வீசிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். இதில் கடை முன்பக்கம் லேசாக சேதமடைந்தது. உடனே கடை ஊழியர்கள் பெட்ரோல் குண்டு வீசிய நபரை விரட்டி சென்று பிடித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பிடிப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் சின்னபோரூர் பகுதியை சேர்ந்த கதிரவன்(32) என்பதும் போரூரில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. போதைக்கு அடிமையான கதிரவன் ஏற்கெனவே மதுபானம் வாங்கி குடித்துள்ளார். பின்னர் மீண்டும் மதுபானம் வாங்க வந்தபோது கடை மூடிய ஆத்திரத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து குவார்ட்டர் பாட்டிலில் நிரப்பி பற்ற வைத்து மதுபான கடை மீது வீசியது தெரியவந்தது. இதனையடுத்து பெட்ரோல் குண்டு வீசிய கதிரவனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே கதிரவன் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மிரட்டல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.