
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே தரைப்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் இரண்டு இளைஞர்களை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள அத்தியூர்திருக்கை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரகு (30), காத்தவராயன் (32). அருகிலுள்ள மேல்வாலை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (38). கொத்தனார் வேலை பார்க்கும் இவர்கள் மூவரும் டி. எடையூரில் உள்ள ஒருவரது வீட்டிற்கு சென்று வீடு கட்டும் வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் மூன்று பேரும் நேற்று மாலை ஆறுமணி அளவில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் கொங்கராயனுரில் இருந்து அருளவாடி செல்லும் தென்பெண்ணை ஆற்று தரைப் பாலம் வழியாக கடந்து தங்கள் ஊருக்கு திரும்ப முயன்றனர். அப்போது தரைப் பாலத்தில் அதிக அளவு நீர் சென்று கொண்டிருந்தது. அதனால் இருசக்கர வாகனங்களை தள்ளிக் கொண்டு மெதுவாக நடந்து சென்றனர். ஆனால் நீரின் வேகத்தில் கால் வழுக்கி ஆற்று தண்ணீரில் கலந்து மூவரும் அடித்துச் செல்லப்பட்டனர்.
அதில் கார்த்திகேயனை அருகே இருந்த கொங்கராயனுர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீட்டுள்ளனர். காத்தவராயன் மற்றும் ரகு ஆகிய இருவரையும் காணவில்லை. திருவெண்ணைநல்லூர் போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறைத் துறையினர் அவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.